ஹர்டாய்: கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக உ.பி., மாநிலம் ஹார்டாய் பகுதியில் ஒரு ஜோடி வினோதமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத் வீட்டிற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால், வெளியே வரமுடியாத சூழ்நிலையில், இரு வீட்டாரும் தங்களது வீட்டில் இருந்தவாறு தொலைபேசி மற்றும் பேஸ்டைம் என்னும் வீடியோ கால் செயலி மூலமாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, ஹமீத்-மெஹபீன் ஆகிய இருவரும் அவரவர் வீட்டில் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தனர்.